Tamil Daily Calendar (தமிழ் நாட்காட்டி)

தமிழ் - இந்த உலகத்தில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் உள்ளது. அதில் மிகவும் தனித்தன்மையை கொண்டும், தனி சிறப்புகளையும் கொண்டுள்ளது நம்முடைய தமிழ் மொழி தற்போது வழக்கில் இருக்கும் செம்மொழிகளில் ஒன்றாகும். மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழியாக இருக்கும் தமிழ் மொழி 4400 ஆண்டுகள் பழமையானது என்று தொல்லியல் துறை அறிஞர்கள் கூறுகிறார்கள். அத்தகைய தமிழ் மொழியின் தமிழ் நாட்காட்டி என்பது இந்திய துணைக்கண்டத்தின் தமிழ் மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பக்கவாட்டு சூரிய நாட்காட்டி ஆகும். இது இந்தியா,புதுச்சேரியிலும் , இலங்கை , மலேசியா , சிங்கப்பூர் , மியான்மர் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் உள்ள தமிழ் பேசும் மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது. சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைப் பொறுத்து தமிழ் மாதங்கள் தொடங்கி முடிவடைகின்றன, தமிழ் மாதங்களின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக வைக்கப்பட்டிருக்கிறது அத்தகைய தமிழ் மாதங்களை பற்றியும் அதன் சிறப்புகளை பற்றியும் இனி காண்போம்

  • சித்திரை(Chithirai) : ( ஏப்ரல் நடுப்பகுதி முதல் மே நடுப்பகுதி வரை) தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை. இன்று திருவாதிரை என்று அழைக்கப்படும் ஓரைதான் ஒரு காலத்தில் சித்திரை என்று அழைக்கப்பட்டது. திரு ஆதி ஒரை = திருவாதிரை ரிஷபம் உள்ளடக்கிய ராசிகளை கொண்ட ஓரை. ரிஷபம் என்ற மாடு சிவனின் வாகனம். சிவனே தமிழர்களின் முதல் கடவுள் ,முதல் சித்தன், ஓகக் கலையை கண்டுபிடித்த ஆதியோகி. சித்தர் ஓரை = சித்திரை இரவில் வானில் 6 மணிக்கு திருவாதிரை நட்சத்திரம் தெரியும் நாளில் தமிழர்களின் வருடம் முதலில் பிறந்தது அதன் நினைவாகவே முதல் மாதத்திற்கு சித்திரை என்று பெயர் வைக்கப்பட்டது.
    முக்கிய திருவிழாக்கள்: வருட பிறப்பு, சித்திரா பௌர்ணமி, மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்
  • வைகாசி(Vaigasi) : ( மே நடுப்பகுதி முதல் ஜூன் நடுப்பகுதி வரை) வை என்றால் வெளிச்சம் வெளிச்சம் தரும் கல் வைரம் , வைரவன் என்றால் சூரியனை குறிக்கும் கால வைரவன், காலபைரவன் ஆகியிருக்கிறது. சூரியனே காலத்தை கணக்கிட உதவுகிறது இதை வைத்து முதலில் காலத்தை கணக்கிட்டவர் சிவன் அதனால் சிவனை காலபைரவன் என்றும் காலன் என்றும் அழைக்கிறோம். சூரியனின் வெப்பம் காசும் மாதம் வைகாசி. ( வெயில் அதிகமான மாதம்)
    முக்கிய திருவிழாக்கள்: வைகாசி விசாகம் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், நம்மாழ்வார் அவதார விழா, ஆதிசங்கரர் மற்றும் இராமானுஜர் அவதார தினங்கள்
  • ஆனி(Aani) : (ஜூன் நடுப்பகுதி முதல் ஜூலை நடுப்பகுதி வரை) செடியில் ஆழத்திற்கு செல்லும் வேர் ஆணிவேர் (ஆழ் நுழை - ஆழ் நு - அழ் நி - ஆனி). விதைத்த விதைகள் அவற்றின் வேர்கள் ஆழத்திற்கு செல்லும் மாதம். சுவற்றை துளையிட்டு உள்ளே செலுத்தும் இரும்பை ஆணி என்கிறோம்.
    முக்கிய திருவிழாக்கள்: தில்லையில் ஆனித் திருமஞ்சனம்
  • ஆடி (Aadi) : (ஜூலை நடுப்பகுதி முதல் ஆகஸ்ட் நடுப்பகுதி வரை) செடி முளைத்து ஆடும் பருவம் ஆடி
    முக்கிய திருவிழாக்கள்: ஆடி அமாவாசை அன்று பிதுருக்களின் வழிபாடு. திருவாடிப்பூரம் ஆண்டாள் அவதாரம்
  • ஆவணி(Aavani) : (ஆகஸ்ட் நடுப்பகுதி முதல் செப்டம்பர் நடுப்பகுதி வரை) பெண்கள் பருவம் அடைந்தபின் அணியும் ஆடை தாவணி. இந்த தாவணி என்னும் சொல்தான் மெய் மயங்கி ( த் + ஆ = தா) ஆவணி என்றானது. அவிட்டம் நட்சத்திரத்தில் பருவமடைந்த ஆண்களுக்கான சடங்கும் இந்த மாதத்தில் தான் செய்யப்படுகிறது ஆவணி அவிட்டம் என்ற பெயரில்.
    முக்கிய திருவிழாக்கள்: வரலஷ்மி விரதம், கோகுலாஷ்டமி, பிள்ளையார் சதுர்த்தி, திருவோணம் மற்றும் அந்தணர்கள் பூணுலை மாற்றிக கொள்ளும் உபாகர்மா என்ற சடங்கு
  • புரட்டாசி(Purattasi) : (செப்டம்பர் நடுப்பகுதி முதல் அக்டோபர் நடுப்பகுதி வரை) விளைந்த பயிரை அறுத்து புரட்டி அடிக்கும் மாதம். புரட்டி அடி - புரட்டாடி - புரட்டாசி
    முக்கிய திருவிழாக்கள்: திருவேங்கடமுடையானுக்கு உகந்த மாதம். ஒவ்வொரு ஸ்ரீநிவாசன் ஆலயத்திலும் சிறப்பான வழிபாடுகள். மகாளய அமாவாசை மற்றும் நவராத்திரி பண்டிகை
  • ஐப்பசி(Ippasi) : (அக்டோபர் நடுப்பகுதி முதல் நவம்பர் நடுப்பகுதி வரை) நெல்லை விளைவித்து அதை மருத நிலத்தை சேர்ந்தவர்கள் ஐந்து நிலத்து மக்களுக்கும் பிரித்துக் கொடுத்து ஐந்து நிலங்களின் பசியை தீர்க்கும் மாதம் ஐப்பசி. நெல்லைக் கொடுத்து மற்ற நிலங்களில் கிடைக்கும் பொருட்களைப் பண்டமாற்றி கொள்வார்கள்.
    முக்கிய திருவிழாக்கள்: தீபாவளித் திருநாள், சிவபெருமான் திருக்கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் நடைபெறும்
  • கார்த்திகை(Kaarthigai) : (நவம்பர் நடுப்பகுதி முதல் டிசம்பர் நடுப்பகுதி வரை) முருக கடவுளுக்கான மாதம். முருகர் விவசாய கடவுள் அதாவது விவசாயத்தை தோற்றுவித்தவர் அதனால்தான் விவசாயம் வேளாண்மை என்றும் அதை மேற்கொள்பவர் வேளாளர் என்றும் அழைக்கப்படுகிறார். முருகர் கார்காலத்தில் காட்டிற்கு தீ வைத்தவர் விவசாயத்திற்காக. கார் தீ கையன் - கார்த்திகேயன்.
    முக்கிய திருவிழாக்கள்: கந்த சஷ்டி விரதம், முருகன் திருக்கோயில்களில் சூரசம்ஹார திருவிழா, அண்ணாமலையார் பரணி/திருக்கார்த்திகை தீபம், ஆலயங்களில் சொக்கப்பனை கொளுத்துதல், சபரிமலைக்கு செல்வோர் கார்த்திகை முதல் தேதி மாலை அணிவர் (திருக்கோயிலும் கார்த்திகை முதல் தேதி வழிபாட்டுக்காக நடை திறக்கப்படும்).
  • மார்கழி(Maargazhi): (டிசம்பர் நடுப்பகுதி முதல் ஜனவரி நடுப்பகுதி வரை) மாரி என்றால் மழை ,மழை பொழிந்த பிறகு வரும் மாதம் மார்கழி.
    முக்கிய திருவிழாக்கள்: ஆண்டாள் பாவை நோன்பிருந்து கண்ணனை அடைந்த மாதம். திருமால் கோயில்களில் திருப்பாவையும், சிவன் கோயில்களில் திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சி பதிகங்களும் ஓதப்படும். வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆருத்திரா தரிசனம் கொண்டாடப்படும் மாதம் இது. அனுமனின் அவதார தினமும் மார்கழியில் கொண்டாடப்படுகிறது.
  • தை(Thai): (ஜனவரி நடுப்பகுதி முதல் பிப்ரவரி நடுப்பகுதி வரை) தாய் என்பவள் குழந்தைகளை கரு உருவாக்குபவள். இரண்டாம் பருவத்தில் செடி முளைக்கும் மாதம். தாய் தை ஆனது தையல் என்றாலும் பெண்ணைத்தான் குறிக்கும்.
    முக்கிய திருவிழாக்கள்: பொங்கல் திருநாள், தைப்பூச பண்டிகை ஆகியவை கொண்டாடப்படும் மாதம். தை அமாவாசை திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் அவதரித்த நன்னாள். அன்று அந்த திருக்கோயிலின் குளத்தில் நீராடினால், கங்கையில் நீராடுவதைக் காட்டிலும் சிறப்பானது என்று கருதப்படுகிறது.
  • மாசி(Maasi): (பிப்ரவரி நடுப்பகுதி முதல் மார்ச் நடுப்பகுதி வரை) மகவுக்காக சூல் பிடிப்பது மகசூல். மகசூல் - மகசு - மகசி - மாசி. நெல் சூல் பிடிக்கும் காலம்.
    முக்கிய திருவிழாக்கள்: மாசி மகம். திருச்செந்தூர் திருக்கோயிலில் மாசித் திருவிழா
  • பங்குனி(Panguni) (மார்ச் நடுப்பகுதி முதல் ஏப்ரல் நடுப்பகுதி வரை) இதுவும் முருகனுக்கான மாதம்தான். மலைகளில் வாழ்ந்த குறவர்கள் காட்டை அழித்து விவசாயம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் .அவர்களை போரிட்டு வென்றவர் முருகன். உத்தரை என்றால் உயர்ந்த தரை அதாவது மலையைக் குறிக்கும். குறவர்கள் வலிமையானவர்கள். வல் குனி - பல் குனி - பங்குனி . பங்குனி உத்திரம் இந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
    முக்கிய திருவிழாக்கள்: பங்குனி உத்திரம். முருகன், ஐயப்பன் திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு. சிவன், திருமால் கோயில்களில் திருமணம். திருவரங்கத்தில் அரங்கநாதரும், ரங்கநாயகி தாயாரும் சேர்த்தி காட்சி (வருடத்தில் ஒரு நாள்).